யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் க. பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்று 'வயம்ப' பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவனான மு. நவரத்தின கஜன் தனது 21 ஆவது வயதில் பொறியியல் தொழில் நுட்ப பாடத்தில் ஒரு பகுதியான 'நில அளவை' என்ற நூலை வெளியீடு செய்து சாதனை படைத்து, கல்வியிலாளர்கள் உட்படப் பலரதும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார்.
மேற்படி நூலின் வெளியீட்டு விழா இன்று (05) முற்பகல் யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ துர்க்கா பொதுநோக்கு மண்டபத்தில் ஓய்வு நிலை வைத்தியர் ஆ.திருநாவுக்கரசு தலைமையில்
இடம்பெற்றுள்ளது.
இந்த வெளியீட்டு விழாவிற்கு மடு வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.சுபாகரன் பிரதம விருந்தினராகவும், வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான ரி.பிரகாஷ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
குறித்த நூலை யாழ்ப்பாண தேசியக் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் நா. அம்பிகைபாகன் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்ததோடு அவர் உட்பட மாணவனது நூலாக்க முயற்சியை விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள், மிகவும் பாராட்டி
பேசியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் க.பொ.த உயர்தரத்தில் தொழில் நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. திறன் மிக்கவர்களை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாட நெறியில் முதலாவது அணி மாணவனாகக் கல்வி கற்றுத் தற்போது பல்கலைக் கழகத்திற்குத் குறித்த மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பாடநெறி கற்கும் சிங்கள மொழி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிங்கள மொழியில் பல நூல்கள் வெளிவந்திருந்தாலும் கூடத் தமிழ் மொழியில் இதுவரை நூல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இக்குறையை மாணவன் நவரத்தின கஜனின் 'நில அளவை' என்ற நூல் ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் எனக் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி நூல் போதியளவு விளக்கப்படங்களுடனும், விளக்கக்குறிப்புக்களுடனும் வெளிவந்துள்ளமையால் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், 'நில அளவை' தொடர்பில் அறிந்து கொள்ள ஆவல் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக
அமையும்.
நவரத்தின கஜன் கடந்த 2015 ஆம் ஆண்டில் இலகு கணனி (தொடர்-1), (தொடர்-2) ஆகிய நூல்களையும், வெற்றி, கணித குறிப்புக்கள் போன்ற நூல்களையும், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கான தன்னியக்க வாகனப் பொறியியல் தொழில்நுட்பம் எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>