வசாவிளான் மத்திய மகா வித்தியாலத்தின் உதைபந்தாட்ட அணி வடக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று முதன்முறையாக தேசிய மட்டத்துக்குத் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனைக் கைப்பற்றியது. வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டியில் 19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டம் நேற்று முன்தினம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதன்முறையாகப் பங்கேற்ற வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி அணிகள் மோதின. மிக விறுவிறுப்பாக ஆரம்பமான இந்த ஆட்டத்தில் மானிப்பாய் இந்துவின் வீரர் அகிலன் ஐந்தாவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டார். இதற்குப் பதிலடியாக வசாவிளானின் கயந்தன் எட்டாவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 1: 1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் வசாவிளான் மத்தி. வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனாலும் மானிப்பாய் இந்துவின் தடுப்பாட்ட வீரர்களினால் வசாவிளானின் கோல் போடும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இதனால் இரண்டாவது பாதியாட்டம் கோல் எதுவும் பெறப்படாமலே சமநிலையில் முடிவடைந்தது.
இதனால் சமநிலை தவிர்ப்பு உதையின் மூலமாக வெற்றி வாய்ப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஆதிக்கம் செலுத்திய மானிப்பாய் 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் காலிறுதியில் கிளிநொச்சி வேரவில் மகா வித்தியாலயத்தை 2:0 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதியில் பல மிக்க அணியான மன்னார் சென்.சேவியர் அணியை 3:1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் 15,17 வயதுப்பிரிவு கரப்பந்தாட்ட அணிகளும் தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக