மன்னார் நானாட்டான் அருவியாற்றில் நேற்று திங்கட்கிழமை குளிக்கச் சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த முஹம்மது சிபான் வயது 26, முஹம்மது முபாஸ் வயது 18 ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மற்றும் மூன்றாவது சகோதரர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
குறித்த சகோதரர்கள் தமது குடும்பத்தினர் சகிதம், நேற்று நண்பகல் நானாட்டான் பிரதேசத்திலுள்ள அருவியாற்றுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது மூன்றாவது சகோதரரான 18 வயதுடைய இளைஞர் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது தமது சகோதரன் நீரில் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்த இரு சகோதரர்களும் அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் பாய்ந்துள்ளனர்.
எனினும் எதிர்பாராத வகையில் மூத்த மற்றும் மூன்றாவது சகோதரர்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து இரண்டாவது சகோதரர் மற்றும் உறவினர்கள் சம்பவம் பற்றி பிரதேச மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், இரு சகோதரர்கள் காணாமல் போனமை பற்றி நானாட்டான் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து நண்பர்கள், பிரதேசவாசிகள், கடற்படையினர் கூட்டாக இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு காணாமல் போன இரு சகோதரர்களும் மாலை ஆறு மணியளவில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள குறித்த அருவியாற்றில் இதற்கு முன்னரும் பலர் குளிக்கச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக