விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் பரந்தனிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த மகேந்திரா பிக்கப் வாகனமும் பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
மேலும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த மற்றுமொரு முன்பள்ளி ஆசிரியர் ஓரிரு காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் பரந்தன்-முல்லை வீதியில் 18ஆவது - 19ஆவது மைல் கல்லுகளுக்கு இடைப்பட்ட 123ஆம் கட்டை விசுவமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவரும் அம்பாள்குளம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியையுமான சிவபாலன் கஸ்தூரி (வயது-25)
என்ற யுவதியே
உயிரிழந்தவராவார். இவருடன் பயணித்த இல.20 புதுமுறிப்பு இறக்கச்சியைச் சேர்ந்த இராபேல் உசாந்தினி (வயது-37) என்ற மற்றைய முன்பள்ளி ஆசிரியை காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் தெரியவருவதாவது,
விசுவமடுவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் பரந்தனிலிருந்து விசுவமடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மகேந்திரா பிக்கப் வாகனமும் நேருக்குநேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது. இதன்போது பிக்கப் வாகன சாரதி வாகனத்துடன் தப்பிச்
சென்றுள்ளார்.
வீதியில் படுகாயங்களுக்கு இலக்காகி குற்றுயிராய் இருந்த ஆசிரியையையும் காயங்களுக்குள்ளான மற்றைய ஆசிரியையும் வீதியால் பயணித்தவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும் பிரஸ்தாப ஆசிரியை வழியில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விசுவமடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விரைந்து செயற்பட்டதில் கல்லூறு பிரதேசத்தில் வைத்து பிக்கப் வாகனத்துடன் சாரதி மடக்கிப் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக