.பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் மூவர், நேற்றுமுன்தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா லவன், கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்ட வைரமுத்து கனகரட்னம்,
விடுதலைப் புலிகளின ஆயுதக் களஞ்சியப் பொறுப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றியதாக 2009ம் ஆண்டு ஆடி மாதம் பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் செட்டிக்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யோசப் ஜேம்ஸ் ஆகிய மூன்று சந்தேக நபர்களுமே விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
பயங்கரவாதத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் பொலிசாரினால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யபட்ட பின்னர் இவர்களது விசாரணைக் கோவை சட்டமா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் குற்ற ஓப்புதல் வாக்குமூலத்தை பொலிசாருக்கு வழங்கவில்லையெனவும் மேலும் வேறு எந்தச் சான்றுகளும் இல்லாத நிலையில் பொலிசாரினால் சந்தேக
நபர்களது விசாரணைக் கோவை சட்டமா அதிபருக்கு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டன. சான்று காணப்படின் வழக்குத் தாக்கல் செய்யவும்,
இல்லையெனில் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எனவே சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்கின்றாரா? அல்லது விடுதலை செய்வதா என்பதை பொலிசார் சட்டமா அதிபர்
திணைக்களத்திடமிருந்து அறியப் பெற்று, இந்த நீதிமன்றிற்கு அறிவிக்கும்படி
பொலிசாருக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டதையடுத்து, மீண்டும் இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்த வேளையில் மூன்று சந்தேக
நபர்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் இல்லாததால், மூன்று சந்தேக நபர்களையும் விடுதலை
செய்யும்படி சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசார் நீதிமன்றிற்கு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக